

புதுடெல்லி,
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை பின்பற்றுவது என ஒப்புக்கொண்டுள்ளன.
இதுபற்றி இந்திய அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தும்போது, சண்டை நிறுத்தம் என்பதால் பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவத்தின் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்றோ அதன் விழிப்புணர்வு குறைக்கப்பட்டு விட்டது என்றோ அர்த்தம் ஆகி விடாது. சண்டை நிறுத்தத்தில் எச்சரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் உள்ளோம் என குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஊடுருவல்களை தடுப்பது வலுவாக தொடர்கிறது. ஊடுருவல் தடுப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடரும். அச்சுறுத்தலை தணிப்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் வெளிப்படையாக உள்ளன என்றும் கூறினர்.
பாகிஸ்தான் எல்லையில் படைகளை நிறுத்துவதையோ, பயங்கரவாத தடுப்பு மற்றும் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளையோ விட்டு விட மாட்டோம். ஆனால், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் அடைவதுதான் பிராந்தியத்துக்கு நல்லது என்பதால் அதற்கான முயற்சி தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.