ஜனாதிபதி மாளிகையில் உள்ள மண்டபங்களின் பெயர்கள் மாற்றம்

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள தர்பார் ஹாலின் பெயர் 'கணதந்திர மண்டபம்' என்று மாற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம் ANI
கோப்புப்படம் ANI
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் உள்ள இரண்டு முக்கிய மண்டபங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள தர்பார் ஹாலின் பெயர் 'கணதந்திர மண்டபம்' என்றும் அசோக் ஹாலின் பெயர் 'அசோக் மண்டபம்' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் இல்லமாக இருக்கும் ஜனாதிபதி மாளிகை தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. இதை எளிதில் மக்கள் அணுகும் வகையில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மாளிகையின் சுற்றுப்புறத்தை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜனாதிபதி மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றை முறையே 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என மறுபெயரிடுவதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக 'தர்பார் ஹால்' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com