“தேவைப்பட்டால் சம்மன்” பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இந்திய அரசு எச்சரிக்கை

பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் இந்திய அரசும் எச்சரிக்கையை தெரிவித்து உள்ளது. #CambridgeAnalytica #Facebook #India
“தேவைப்பட்டால் சம்மன்” பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இந்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

சமூக வலைத்தளமான பேஸ்புக் எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ஆப் மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து பேஸ்புக் நீக்கிவிட்டது.

இந்தியா எச்சரிக்கை

பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் இந்திய அரசும் எச்சரிக்கையை தெரிவித்து உள்ளது.

இந்தியர்கள் தகவல் விவகாரத்தில் பேஸ்புக் சமரசம் செய்துக்கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டால் இந்தியாவிற்கு வர மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுக்க முடியும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்பது தெரியவந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுப்போம், என கூறினார்.

இன்று இந்தியாவில் 20 கோடி பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ளார்கள். இந்தியர்களின் தகவல்கள் பேஸ்புக் மூலம் பகிரப்பட்டால், நாம் கடுமையான ஐடி சட்டத்தை வைத்து உள்ளோம். தகவல்கள் பகிர்வு விவகாரத்தில் இந்தியாவால் பேஸ்புக் அதிகாரிகளுக்கு சம்மன் விடுக்க முடியும். அமெரிக்கா மற்றும் கென்யா தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தன்னுடைய செல்வாக்கை செலுத்தியிருக்கலாம். நாங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கிறோம், இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கை மேற்கொள்ள சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்.

நாங்கள் இதனை சகித்துக்கொள்ள மாட்டோம் என பேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கையை விடுக்க விரும்புகிறோம், என கூறிஉள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com