கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை

கோடக் மஹிந்திரா வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
Published on

புதுடெல்லி,

கோடக் மஹிந்திரா வங்கியின் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது. இதன் காரணமாக தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாகவும்தான் பெறுகிறது.

இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, இருப்புச் சிக்கல்களை விரைவாகத் தீர்ப்போம் என்றும் கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com