

மும்பை,
ஆன்லைனில் மட்டும் பரிமாற்றம் நடைபெறும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. அதை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளும் இல்லை. சமீபகாலமாக, கிரிப்டோ கரன்சியில் முதலீடு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், மும்பையில் நேற்று நடைபற்ற வங்கிகள் மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன. நன்றாக பரிசீலித்த பிறகு ரிசர்வ் வங்கி இதை சொல்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அது உருவெடுக்கக்கூடும்.
இதுதொடர்பாக மிகவும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். கிரிப்டோ கரன்சியில் கணக்கு தொடங்குவதற்காக முதலீட்டாளர்களுக்கு கடன் அளிக்கப்படுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்களை கவர வேறு சில ஊக்கச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.