உலக அளவில் சிறந்த மத்திய வங்கி தலைவர்கள் பட்டியலில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதல் இடம்..!

உலக அளவில் சிறந்த மத்திய வங்கி தலைவர்கள் பட்டியலில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் சிறந்த மத்திய வங்கி தலைவர்கள் பட்டியலில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதல் இடம்..!
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவைச் சேர்ந்த, நிதித்துறைப் பற்றிய பத்திரிக்கையான குளோபல் பைனான்ஸ், உலக நாடுகளின் ரிசர்வ் வங்கி தலைவர்கள் 2023 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் ரிசர்வ் வங்கி தலைவர்களின் செயல் திறன்களை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஏ முதல் எப் வரை தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல், தேசிய கரன்சியின் மதிப்பை நிலை நிறுத்துதல், வட்டி விகிதத்தை நிர்வகித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை முடிவு செய்யப்படுகிறது. 2023ல் மூன்று மத்திய வங்கி தலைவர்களுக்கு உச்சபட்ச தர வரிசையான ஏ பிளஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சக்திகாந்த தாஸ், சுவிட்சர்லாந்தின் தாமஸ் ஜோர்டன் மற்றும் வியட்நாமின் நியுயேன் தி ஹாங் ஆகிய மூவரும் ஏ பிளஸ் பெற்று, முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, பிரேசில், இஸ்ரேல், தைவான், உள்ளிட்ட 8 நாடுகளின் மத்திய வங்கி தலைவர்கள் ஏ கிரேட் பெற்று இரண்டாம் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட10 நாடுகளின் மத்திய வங்கித் தலைவர்கள் ஏ மைனஸ் கிரேட் பெற்று, மூன்றாம் வரிசையில் உள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய உலகின் டாப் 4 பொருளாதாரங்களை சேர்ந்தவர்கள் யாரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியினால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மற்றும் வட்டி விகிதம் வெகுவாக அதிகரித்து, பல வங்கிகள் திவாலாகியுள்ளன. ஆனால் உலக பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்ததில், சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் பங்களிப்பு பாராட்டுதலை பெற்றுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத முறையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் 2023ன் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் விருதை சக்திகாந்த தாஸுக்கு பிரிட்டன் அளித்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com