ஆர்சிபி வெற்றிவிழா கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கு: விசாரணை அறிக்கை முழு விவரம்


ஆர்சிபி வெற்றிவிழா கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கு: விசாரணை அறிக்கை முழு விவரம்
x
தினத்தந்தி 18 July 2025 8:59 AM IST (Updated: 18 July 2025 9:01 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு) காமேஸ்வர்ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் கூட்டநெரிசல் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைகேல் குன்காவின் தனிநபர் ஆணையம் விசாரணை முடிந்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில அரசு அதை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. தற்போது அந்த அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கூட்டநெரிசலில் 11 பேர் சிக்கி பலியான வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த டி.என்.ஏ. நிர்வாகம், ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் அலட்சியமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே போலீசார் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளனர். அதன்படி எந்த பாதையில் கிரிக்கெட் வீரர்களின் ஊர்வலம் நடைபெறும், ரசிகர்கள் வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள், எவ்வளவு ரசிகர்களை கிரிக்கெட் மைதானத்துக்குள் அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா, ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்கள், 4 துணை போலீஸ் கமிஷனர்கள், 6 உதவி போலீஸ் கமிஷனர்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 462 போலீஸ்காரர்கள் உள்பட 654 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திடீரென்று முடிவுகளை மாற்றியதால் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைய இலவச டிக்கெட் அறிவித்தது, நுழைவு சீட்டு வழங்குவதில் அலட்சியம் காட்டியது போன்ற காரணங்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல லட்சம் பேர் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தனர். மேலும் ஒரே நேரத்தில் நுழைவு வாயில்களை திறந்ததால் விபத்து நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story