பள்ளி மாணவர்கள் மாநில மொழி பத்திரிக்கை படிப்பது கட்டாயம்- கர்நாடக அரசு அதிரடி

மாநில மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகளை மாணவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

பெங்களூரு,

இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் மொபைல் போன், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலேயே பொழுதை போக்கவும் அதிக நேரம் செலவிடுவதால், மாணவர்களின் உடல் ஆரோக்கியம், மற்றும் மனநலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கண் பார்வை, ஞாபக சக்தி குறைவதுடன் காது கேளாமை பிரச்சினை ஏற்படவும் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. மேலும், உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் தடைபடும். உடலை பலப்படுத்த உதவும் விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் போகும்.

இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் மாணவர்கள் பத்திரிகைகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதாவது, அம்மாநில மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகளை மாணவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளால், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிப்பதுடன் உடல்நலம் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது, 3-வது மாநிலமாக, கர்நாடக அரசும் இதுபோன்ற அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, கர்நாடக பள்ளிகளில் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கன்னட பத்திரிகை படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கல்வித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட கல்வித்துறையும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கன்னட பத்திரிகைகள் படிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவு அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகள் நடத்தும் உறைவிட பள்ளிகள், விடுதிகள், சிறார்கள் காப்பகங்களுக்கும் பொருந்தும்.

கர்நாடக அரசின் இந்த உத்தரவை கல்வித்துறை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். "பத்திரிகைளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைவிட, மாறுபட்டதாக இருக்கும். பத்திரிகை வாசிப்பதால், சிறார்களின் செவிகளின் திறன் மேம்படும். எழுத்து திறனும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பத்திரிகைகள் படிப்பது, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும். இன்றைய சிறார்கள் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர, உலக அறிவும் அவசியம். எனவே, பத்திரிகை படிப்பது நல்லது" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழக மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும் என்றும் கல்வித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com