இருமுனை போருக்கு தயார்; இந்திய விமானப்படை தளபதி பேட்டி

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் சேர்த்த பின், நமது படையின் பலம் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லையிலும், மேற்கு எல்லையிலும் இருமுனை போருக்கு விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறினார்.
இருமுனை போருக்கு தயார்; இந்திய விமானப்படை தளபதி பேட்டி
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் வடக்கு எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்தது. அப்போது முதல் கடந்த 5 மாதங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான, ராஜ்யரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தை, 12-ந் தேதி நடக்கிறது.

லடாக் எல்லை பகுதியில் இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய விமானப்படை தினம், வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஈடு ஆகாது. இருந்தாலும், எதிரியை குறைத்து மதிப்பிடும் கேள்விக்கே இடமில்லை.

ஆகவே, லடாக் பகுதியில் பொருத்தமான எல்லா இடங்களிலும் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம். எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க விமானப்படை தயார்நிலையில் உள்ளது.

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் சேர்த்த பின், நமது படையின் பலம் அதிகரித்துள்ளது. நாம் ஒரு படி விஞ்சி நிற்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.

வடக்கு எல்லையிலும் (லடாக்), மேற்கு எல்லையிலும் (பாகிஸ்தான்) ஒரே நேரத்தில் இருமுனை போர் மூளும் சூழ்நிலை வந்தாலும், அதை எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com