ரபேல் ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கு தயாரா? - பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கு தயாரா? என பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி நேரடியாக சவால் விடுத்து உள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கு தயாரா? - பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்
Published on

பிதார்,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்தன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுகையிலும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதன் தொடர்ச்சியாக ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடிக்கு தற்போது அவர் சவால் விடுத்துள்ளார். கர்நாடகாவின் மேற்கு பகுதியில் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த மக்களின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாம் இருவரும் (ராகுல், மோடி) விவாதம் நடத்துவோம். இந்த ஒப்பந்தம் குறித்து என்னால் மணிக்கணக்கில் பேச முடியும். உங்களால் முடியுமா?

பிரதமர் மோடி, தன்னை நாட்டின் முதன்மை காவலன் என்று கூறி இருந்தார். ஆனால் இந்த காவல்காரன் ஒரு கூட்டாளியாகி இருக்கிறார். வரி செலுத்துவோரின் பணத்தை திருடி, ரபேல் ஒப்பந்தத்தை பெற்றிருக்கும் நண்பருக்கு கொடுத்து வருகிறார். அவர் நாட்டு மக்களுக்கு பிரதமர் அல்ல. மாறாக வெறும் 15 பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர்.

பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம் என்ற கோஷத்தை பிரதமர் அறிவித்தார். ஆனால் யாரிடம் இருந்து பெண் குழந்தையை காக்க வேண்டும் என்பதை அவர் கூறவில்லை. ஏனெனில் உத்தரபிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்பில் பா.ஜனதா தலைவர் பிடிபடுகிறார். பீகாரில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டால், பா.ஜனதா தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தையும் பேசுவது இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com