நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் - மத்தியப் பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் - மத்தியப் பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்
Published on

போபால்,

மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களை பிடித்தது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 116 இடங்கள் தேவை. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் சமாஜ்வாதி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அங்கு 4 சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக 109 இடங்களில் வென்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா, ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கோபால் பார்கவா கூறுகையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, அரசின் பலம் குறித்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதத்தின்போது நிதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ஆட்சி கவிழும் என்றார்.

இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எங்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை கலைக்க பா.ஜனதா நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் நாங்கள் எங்களது பெரும்பான்மையை 4 முறையாவது நிரூபித்திருப்போம். வாக்கெடுப்பு நடந்தால் அதில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com