2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் - காங்கிரஸ் அறிவிப்பு

மராட்டியம், அரியானா ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் - காங்கிரஸ் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது.

இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த மாதம் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

இந்த தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

அதன் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல் அறிவிப்புகளை வரவேற்கிறோம். தேர்தல்களை சந்திக்க தயார். வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகள் அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தல்களை சந்திப்போம். அரசாங்கம் எந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறதோ, அந்த உண்மையான பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி முழு பலத்தோடு எழுப்பும் என குறிப்பிட்டார்.

தேசிய தலைநகருக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற அரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேச பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி எழுப்பும் என்றும் பவன் கெரா குறிப்பிட்டார்.

சமீபத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரும் சரிவை சந்தித்தது பற்றியும் காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதன் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதும் மக்களின் உண்மையான பிரச்சினைதான் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உறுதியான காரணங்கள் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பவன் கெரா சாடினார்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி.யின் நிதியை, கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களில், வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் கூறி அவர் மத்திய அரசை விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com