இந்தியாவில் ஆகஸ்டில் சாதனை அளவாக மழைப்பொழிவு: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் இயல்பை விட கூடுதலாக மிக பெய்த மழைப்பொழிவு செப்டம்பரிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுன்ஜெய் மொகபத்ரா இணையம் வழியே செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது, நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், பல்வேறு மாநிலங்களில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதில், மாதத்தின் 2-வது பாதியில் இயல்பை விட கூடுதலாக மிக அதிக அளவு மழைப்பொழிவு இருந்தது. அது செப்டம்பரிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டில் இந்தியா முழுவதும் பெய்த மழையளவு 268.1 மி.மீ ஆகும். இது 2001-ம் ஆண்டில் இருந்து 7-வது முறையாக அதிகம் ஆகும். 1901-ம் ஆண்டில் இருந்து 45-வது அதிக மழை பொழிவாகும் என்றார்.
வடமேற்கு இந்தியாவில் 265.0 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 2001-ம் ஆண்டில் இருந்து பெய்த அதிக மழைப்பொழிவு ஆகும். 1901-ம் ஆண்டில் இருந்து 13-வது அதிக மழை பொழிவாகும் என்றார்.
தெற்கு தீபகற்ப இந்தியாவில் 250.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 2001-ம் ஆண்டில் இருந்து 3-வது அதிக மழைப்பொழிவு ஆகும். 1901-ம் ஆண்டில் இருந்து 8-வது அதிக மழை பொழிவாகும் என கூறியுள்ளார்.






