

புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி முதல் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.
இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர். உடன் அவர்கள் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றனர்.
போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காக விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டு வரலாம். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிவருகிறது.
இதுபோன்ற சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதற்கான பேரணியில் விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.
இதன்பின்னர் விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர். கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் டெல்லி செங்கோட்டை முற்றுகை பற்றி குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், திட்டமிட்டபடி விவசாயிகள் அதிக அளவில் செங்கோட்டைக்குள் நுழைந்தனர்.
பல மணிநேரம் உள்ளேயே தங்கிவிட்டனர். டெல்லி செங்கோட்டையை கைப்பற்றி, அதனை தங்களுடைய புதிய போராட்டகளம் ஆக்குவதற்கு விவசாயிகள் விரும்பினர். உலகம் முழுமைக்கும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப ஜனவரி 26ந்தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இதற்காக கடந்த நவம்பர்-டிசம்பரில் அவர்கள் திட்டமிட்டனர். அரியானா மற்றும் பஞ்சாப்பில் இருந்து எண்ணற்ற டிராக்டர்களை இதற்காக கொண்டு வந்தனர் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தரவுகளையும் டெல்லி போலீசார் அதனுடன் இணைத்து உள்ளனர்.