உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

2022-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
Published on

புது டெல்லி,

ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இதில் 14.2 கிலோ எடையில் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. பின்னர் இந்த மானியத்தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய சிலிண்டர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது.

எரிவாயு அமைச்சக அதிகாரி

தற்போது இந்த எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன்மால் கனூஜா தெரிவித்து உள்ளார். கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுக்கு பெருமளவில் ஒத்துப் போவதாக கூறினார். வளைகுடா போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வணிகரீதியான மற்றும் வீட்டுப்பயன்பாடு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.

ரூ.1,600 செலவு

குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் வீட்டுப்பயன்பாடு சிலிண்டர் விலை சுமார் ரூ.100 வரை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.950-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதில் உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழலில் சிலிண்டர் ஒன்றின் வினியோகத்துக்கு அரசு ரூ.1,600 வரை செலவிடுகிறது. ஆனாலும் இந்திய குடும்பங்கள் சிலிண்டருக்கு குறைந்த விலையையே செலுத்தி வருகின்றனர். அதிலும் உஜ்வாலா பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,000 வரை சேமிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல்களை பிரவீன் மால் கனூஜா தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com