

லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள காசிராம் காலனி பகுதியில் உள்ள 100 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது நேற்று மதியம் 5 சிறுவர்கள் 'ரீல்ஸ்' எடுப்பதற்காக ஏறியுள்ளனர். அவர்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, தொட்டியின் இரும்பு ஏணி திடீரென உடைந்து விழுந்தது.
இதில் கீழே விழுந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். ஆனால், மேலே இருந்த இரண்டு சிறுவர்கள் கீழே இறங்க வழி தெரியாமல் திகைத்தனர். ஏணி முற்றிலும் உடைந்ததால் சுமார் 100 அடி உயரத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்ட மற்ற 2 சிறுவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் முதலில் கோரக்பூரிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தை அழைத்தார்கள், ஆனால் சாலை சரியில்லாததால் மாற்று வழியாக விமானப் படையின் உதவியை நாடினர்.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்தது ராணுவம். அவர்கள் சுமார் 16 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.