

புனே,
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சினிமா பாடலுக்கு விதவிதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்ளிட்ட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள்.
அதிகமான லைக்குகள் வர வேண்டும் என்பதற்காக என்னென்னமோ செய்து ரீல்ஸ் வெளியிடுகின்றனர். அந்த வகையில் புனேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள ஜம்புல்வாடி என்ற இடத்தில் உள்ள ஒரு பழுதடைந்த உயரமான கட்டிடத்தின் மேல் ஏறிய அந்த இளம்பெண், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தனது நண்பரின் கையை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்துள்ளார். சுமார் 100 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி அந்த பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது போன்ற விபரீத விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.