

புதுடெல்லி
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முடிவெல்லை ஏதுமில்லை என்றார் ஜெட்லி. இந்தியா தனது நீண்ட கால வளர்ச்சியை பெறுவதற்கு கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று ஜெட்லி கூறினார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனும் கலந்து கொண்டனர்.
இந்தியா சீர்திருத்தங்களை பொறுத்தவரை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் அதற்கு முடிவெல்லை ஏதுமில்லை என்றார் ஜெட்லி. ஏராளமான மக்கள் இன்னும் வறுமையில் இருப்பதால் அதிகமான வளர்ச்சி விகிதங்களை சாதிக்க வேண்டியுள்ளது என்றார் ஜெட்லி. இந்தியாவின் முக்கிய தருணங்களில் ஒன்றுதான் 1991 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருதத்தின் துவக்கம் என்ற ஜெட்லி, அது பொருளாதாரம் செல்லும் பாதையை மாற்றியதோடு, மக்களின் எண்ணவோட்டத்தையும் மாற்றியுள்ளது என்றார்.
கடந்த 25 ஆண்டுகளில் சராசரியாக 7 சதவீத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். அரவிந்த் சுப்ரமணியன் கூறும்போது வளர்ந்த நாடுகளின் பிரச்சினை மெதுவான வளர்ச்சி என்றால் வளரும் நாடுகளின் பிரச்சினை வளர்ச்சி வேகத்தை நிலைநிறுத்துவதே என்றார்.