

பெங்களூரு,
மங்களூரு அருகே சூரத்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.-கே) கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் பூமியின் இயல்பு தன்மையை மாற்றும் சூழல் உள்ளது. இது நமது வாழ்க்கை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் உலகம் காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் வருங்கால தலைமுறையினர், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தொழில்முனைவில் ஈடுபட என்ஜினீயரிங் படித்த இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிதாக தொழில் தொடங்க இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நல்ல சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அந்த பணியில் இருந்து விலகி புதிய தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தற்சார்பு திட்டத்தின் கீழ் விண்வெளித்துறையிலும் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
விண்வெளித்துறையில் சீர்திருத்தங்கள் செய்து அதன் மூலம் விண்வெளி தொழில்துறையை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். படித்த இளைஞர்கள் மற்றவர்களை பார்த்து அதே போல் செய்ய வேண்டாம். உங்களுக்கு எதில் விருப்பம் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கே.சிவன் பேசினார்.