அக்., 1-ந் தேதி முதல் அமலாகிறது, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம்

2 ஆண்டுகள் தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவை பெறுவது கட்டாயம் ஆகிறது.
அக்., 1-ந் தேதி முதல் அமலாகிறது, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம், அக்டோபர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

கடந்த 1969-ம் ஆண்டு, பிறப்பு-இறப்பு பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், பிறப்பு, இறப்பை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. அந்த சட்டத்தில், 2023-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே, பிறப்பு, இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்ய பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், தாமதமாக பதிவு செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்கும் நோக்கத்திலும் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தின் 13(3)-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் கடந்த மாதம் சட்டமானது.

1-ந் தேதி அமல்

இந்நிலையில், பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம், 2026 அக்டோபர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்திய பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், அரசிதழ் அறிவிப்பாணையில் இத்தகவலை தெரிவித்துள்ளார். புதிய திருத்தத்தின்படி, பிறப்பு, இறப்பு நடந்து ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்வதற்கு ஏற்கனவே இருப்பதுபோல், மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவைப் பெற வேண்டும்.

மாஜிஸ்திரேட் உத்தரவு

பிறப்பு, இறப்பு ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு அதை பதிவு செய்ய வேண்டுமானால், உயர்மட்ட அளவில் கடுமையான நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதாவது, முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவைப் பெற்றுத்தான் பதிவு செய்ய முடியும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com