

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாகத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிதி நெருக்கடியில் நிறுவனங்கள் சிக்கியுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஹைட்ரோகார்பன் நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10 முதல் 50% ஊதிய குறைப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன் நிர்வாகியும், இந்தியாவின் பணக்காரர்களில் முதலிடத்தை வகிப்பவருமான முகேஷ் அம்பானி தனது முழு ஊதியத்தையும் கைவிட முடிவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், செயல் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மூத்தத்தலைவர்கள் அனைவருக்கும் 30 - 50 சதவீத ஊதிய குறைப்பு செய்யப்பட உள்ளது. குறைவான தேவை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வணிகம் பொருளாதார சிக்கலை சந்தித்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் ஹைட்ரோகார்பன் வணிகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, இது குறித்து நிறுவனத்தின் பல துறைத் தலைவர்களும் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு எந்த வித பிடித்தமும் செய்யப்படாது எனவும், 15 லட்சத்திற்கும் மேல் பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ரிலையன்ஸ் இண்டஸ்டரிஸ் நிறுவனமும் ஆண்டு ரொக்க போனஸ் மற்றும் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆகியவற்றை நடப்பாண்டு தள்ளிவைத்துள்ளது. வழக்கமாக முதல் காலாண்டில் இந்த தொகை வழங்கப்பட்டு விடும்.