கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - மராட்டிய முதல்வர் அறிவிப்பு

மராட்டிய மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,476 கோடிக்கு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - மராட்டிய முதல்வர் அறிவிப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா காட்டுத்தீயை விட வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் மராட்டிய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே மாதம் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதையடுத்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,476 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளார். இதன்முலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம், உரிமம் பெற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.1,500-ம், இதேபோல பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சஞ்சய் காந்தி நிராதர், ஷ்ரவன்பால் மற்றும் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு மாநில மற்றும் மத்திய திட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 12 லட்சம் ஆதிவாசி குடும்பத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி கிடைக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் நிவாரண தொகுப்பை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஜித் பவார், மந்திரிகள் சகன் புஜ்பால், ஏக்நாத் ஷிண்டே, அனில் பரப், ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, விஜய் வடேடிவார் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிதி துறையை கையில் வைத்திருக்கும் துணை முதல் மந்திரி அஜித் பவார் நிவாரண தொகுப்பை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com