டெல்லியை புயல் தாக்கும்: செல்போன்களுக்கு வந்த அவசர அலர்ட் - மக்கள் அச்சம்

கடும் இடி மின்னலுடன் டெல்லியை புயல் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
Published on

புதுடெல்லி,

தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. பருவமழை வருகிற 3 அல்லது 4-ந்தேதிகளில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை தொடர்பான 2-வது கட்ட நீண்ட கால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.) நேற்று வெளியிட்டது.

தென்மேற்கு பருவமழை

அதில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட குறைவாகவே இருக்கும். இது வடகிழக்கு இந்தியாவில் இயல்பான அளவிலும் (94 சதவீதம் முதல் 106 சதவீதம் வரையில்), மத்திய மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் இயல்பைவிட குறைவாகவும் (94 சதவீதம்). வடமேற்கு இந்தி யாவில் இயல்பைவிட குறைவாகவும் (92 சதவீதம்) இருக்க வாய்ப்புள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை இயல்பைவிட குறைவாகவே இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. பரு வமழையின் தொடக்க மாதமான ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பதிவாகும் சராசரி மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாகவே இருக்கும். அதேபோல நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

டெல்லியை புயல் தாக்கும்

இந்தநிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடும் இடி மின்னலுடன் டெல்லியை புயல் தாக்கும் என்றும்

பலத்த காற்றுடன் மழையோ, ஆலங்கட்டி மழையோ பெய்யக்கூடும்.100 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்லியில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், இடி மின்னலுடன் புயல் தாக்கும் என முதல் முறையாக செல்போன்களுக்கு வந்த அவசர எச்சரிக்கையால் டெல்லிவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com