

மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 1-ந்தேதி இரவு சுப்ரமணியா அருகே பர்வதமலை பகுதியில் பெய்த மழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்தது. இதில் வீட்டில் இருந்த குசுமாதாரா-ரூபஸ்ரீ தம்பதியின் பிள்ளைகளான சுருதி(வயது 11), கனஸ்ரீ(6) நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பலியான 2 சிறுமிகளின் இறுதி சடங்கு நடந்தது. இதில் குடும்பத்தினர், கிராம மக்கள் கலந்துகொண்டு சிறுமிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களும் எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீன்வளத்துறை மந்திரியும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எஸ்.அங்கார், உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர், சிறுமிகளின் பெற்றோருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையை நிவாரணமாக வழங்கினார். உடன் கடபா தாசில்தார் ஆனந்தசங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.