புதிய சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

புதிய சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டப்படி, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தங்களது மதத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து வந்த இந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பவுத்தம், ஜெயின், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட மதங்களை சேர்ந்தவர்கள், தங்களது மதத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினரும் தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் நுழைந்ததற்கான ஆவணங்களையும் அளிக்க வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

அதே சமயத்தில், மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க தனி விதிமுறைகள் சேர்க்கப்படும். அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் மட்டும் அளிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com