

நவாப் மாலிக் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அதிக பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு மருந்து நிறுவனங்களை மராட்டியத்திற்கு மருந்து சப்ளை செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மராட்டிய அரசு 16 ஏற்றுமதி நிறுவனங்களிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை கேட்டது. அப்போது மத்திய அரசு மராட்டிய மாநிலத்துக்கு மருந்து சப்ளை செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக அவர்கள் கூறியது அதிர்ச்சியையும், சோகத்தையும் தருகிறது. மராட்டியத்துக்கு மருந்து கொடுத்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உள்ள சூழலில் இது அபாயகரமான முன்உதாரணம் ஆகும். ஏற்றுமதியாளர்களிடம் உள்ள மருந்தை பறிமுதல் செய்து, தேவையானவர்களுக்கு கொடுப்பதை தவிர மாநில அரசுக்கு வேறுவழியில்லை. ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேச முதல்-மந்தி உத்தவ் தாக்கரே முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் பிரதமர் மேற்கு வங்காளத்திற்கு சுற்றுப்பயணம் சென்று இருப்பதாக கூறியுள்ளனர். இதில் இருந்து பா.ஜனதாவுக்கு கொரோனாவை கையாள்வதை விட தேர்தலில் வெற்றி பெறுவதே முக்கியம் என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், " இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதைவிட்டு நவாப்மாலிக் அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். அல்லது அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மகாவிகாஸ் அகாடி அரசு குறைகூறுவதைவிட்டு நோய் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.