

புதுடெல்லி,
சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, ராகேஷ் அஸ்தானா டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகேஷ் அஸ்தானாவின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.
நவம்பர் 1-ந் தேதிக்குள், பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு கூறிய நீதிபதி நஜ்மி வாசிரி, அதுவரை ராகேஷ் அஸ்தானா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.