

சண்டிகர்,
அரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார். குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இரவு 9:30 மணியளவில் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது, தனது காரை தீப் சித்து மோதியதால் சாலை விபத்தில் உயிரிழந்ததாக அரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக அவருடன் பயணித்த பெண் ஒருவரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்துவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான தீப்சித்துவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன என்று அதில் சரண்ஜித் சிங் சன்னி பதிவிட்டுள்ளார்.