

புதுடெல்லி,
குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்? என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார் அதில், வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.
வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுனர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ், திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், பாஜக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோரும் சட்டங்கள் வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று சர்வதேச பிரபலங்கள் கடந்த காலத்தில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். பாடகி ரிஹான்னா, பருவகால செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், காமெடியன் ஹசன் மின்ஹாஜ், லெபனான் மாடல் அழகி மியா கலீபா, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீசின் மருமகள் மீனா ஹாரீஸ், யூடியூபர் லில்லி சிங் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை விவசாயிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.
எனினும், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களான சம்பித் பத்ரா மற்றும் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் இந்தியாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் சர்வதேச சதி திட்டம் இது என கூறியிருந்தனர்.