

ரத்து சட்டத்தில் வழக்குகள் பதிவு
ஷ்ரேயா சிங்கால் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு கருத்துரிமைக்கு எதிராக உள்ளது என தெரிவித்து அதை ரத்து செய்து கடந்த 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.ஆனாலும் அந்தப் பிரிவின் கீழ் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) தேசிய பொதுச் செயலாளரான சென்னையைச் சேர்ந்த வி.சுரேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.
மாநில அரசுகளின் பொறுப்பு
இந்த நிலையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி போலீஸ் துறை, பொது ஒழுங்கு மாநில அரசு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குற்றங்களைத் தடுப்பதும், அவற்றைக் கண்டுபிடிப்பதும், புலன் விசாரணை நடத்துவதும், போலீஸ் அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதும் மாநில அரசின் கடமை. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அதன்படி, தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பு ஆகும்.இதில் மாநில போலீசுக்கும் சமமான பொறுப்புள்ளது என தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்
அதற்கு பி.யு.சி.எல். சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவின்கீழ் பதிவான வழக்குகளின் விவரங்களை மாநில தலைமைச்செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.கள் ஒருங்கிணைப்புடன் சேகரித்து அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஒருவேளை வழக்குப்பதிவு செய்து விசாரணை கட்டத்தில் இருந்தால் அந்த வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற டி.ஜி.பி.களுக்கு உத்தரவிட வேண்டும்.
அறிவுறுத்த வேண்டும்
ஒருவேளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் விசாரணை நிலுவையில் இருந்தால், இதுபோன்ற வழக்குகளையும், குற்றப்பத்திரிகைகளையும் ரத்துசெய்ய அறிவுறுத்தல்களை வழங்க ஐகோர்ட்டு நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும்.அனைத்து மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள், இந்த சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வாயிலாக அறிவுறுத்த வேண்டும்.
அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததற்கு உரிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.களுக்கு உத்தரவிட வேண்டும். அந்த அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரிக்க ஐகோர்ட்டுகளை அனுமதிக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விளம்பரப்படுத்த டி.ஜி.பி.களுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக அரசு தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் மாநில மொழிகள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.