

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் 4.4 ஆக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளாதார ஸ்திரதன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை இதுக்கு முன்பு இருந்ததில்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வோம்.என்றார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.