ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Published on

மும்பை,

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, இந்த வட்டி விகிதத்தை மாற்றி அமைப் பது பற்றி ஆலோசனை நடத்துகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், சில்லறை பணவீக்க விகிதம் 2.74 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதமாக உயர்ந்தது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிக்கடன் வட்டி விகிதம், பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை வட்டிவிகிதம் மொத்தம் 1.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பலனாக வங்கிக்கடன் வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், இது மாற்றப்படாமல் நீடித்தது.

இந்த நிலையில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமின்றி 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். இதன்மூலம் வீடு, வாகனக் கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏதும் இல்லை. எஸ்.டி,எப். விகிதம் 5 சதவீதமாகவும், எம்.எஸ்.எப். விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.5 சதவீதமாகவும் நீடிக்கின்றன.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா கூறியதாவது:-

ஈரான் போரால் உலக பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லை. இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதரவான கொள்கை நடவடிக்கைகள், நடைபெற்று வரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் சாதகமான நிதி நிலைமைகள் ஆகியவற்றுக்கு மத்தியில், வலுவான நுகர்வு மற்றும் முதலீட்டால் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ள உள்ளார்ந்த வலுவான உத்வேகத்தை இது உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு ஆசிய போரால் வங்கிக்கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏற்படுமா? என அச்சத்தில் இருந்த மக்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கை குழு, வங்கிக்கடன் வட்டி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com