

புதுடெல்லி
மேற்காசிய மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இந்திய கொடியுடன் கூடிய இரு கப்பல்களும் கடந்து செல்ல ஈரான் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஈரான், இந்தியா நட்புறவு கொள்கை அடிப்படையில் இந்த முடிவை ஈரான் எடுத்தது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2 இந்திய கப்பல்கள் அனுமதிக்கு பதிலாக இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை வைத்தது என்று தகவல் வெளியானது. கடலில் சட்ட விரோத வகையில் பயணித்த 3 கப்பல்களை இந்தியா சிறை பிடித்தது. அஸ்பால்ட் ஸ்டார், அல் ஜப்ஜியா மற்றும் ஸ்டெல்லார் ரூபி ஆகிய 3 கப்பல்களும் சட்டவிரோத வகையில், கப்பலில் இருந்து கப்பலுக்கு சில பரிமாற்றங்களை செய்தும், இயங்கியும் வந்துள்ளன.
இவற்றில், ஸ்டெல்லார் ரூபி கப்பல் ஈரான் கொடியுடனும், மற்ற 2 கப்பல்களும் நிகரகுவா மற்றும் மாலி நாட்டு கொடிகளுடனும் சென்றன என்றும் அந்த 3 கப்பல்களும் தன்னுடையவை என்று கூறி அவற்றை விடுவிக்கும்படி இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை விடுத்தது என்றும் கூறப்பட்டது.
ஆனால், கப்பல்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானுடன் ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு இன்று கூறியுள்ளது. இந்திய கப்பல் அனுமதிக்கு ஈடாக ஈரான் கோரிக்கை என்ற தகவல் அடிப்படையற்றது என மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இதேபோன்று, இந்த 3 கப்பல்களும் ஈரானுக்கு உரியவை அல்ல. கப்பல்களில் ஈரான் பணியாளர்களும் இல்லை. அவை கப்பல்கள் தான். ஆனால், கச்சா எண்ணெய் போன்ற சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் அல்ல என்றும் அவர் கூறினார்.