குடியரசு தின விழா: புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரி; கவர்னர் வேதனை

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.
குடியரசு தின விழா: புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரி; கவர்னர் வேதனை
Published on

ஐதராபாத்,

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள், மாவட்டங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் மாநில மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஒருமுறை கூறும்போது, ஒரு பிரிவினர் மட்டும் அனைத்து வித சலுகைகளையும் பெற்று கொள்வதும், மற்றொரு பிரிவினர் அனைத்து பாரங்களையும் சுமந்து செல்லும் நிலை கூடாது என கூறினார்.

தேச கட்டமைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான விசயங்கள் ஆகும். புதிது புதிதாக உருவாகும் கட்டிடங்கள் அல்ல. அனைத்து விவசாயிகளும் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களும், பண்ணைகள் மற்றும் வீடுகளை வைத்திருக்க வேண்டும்.

இதுதவிர்த்து, ஒரு சிலரிடம் மட்டுமே விவசாய பண்ணைகள் இருப்பது கூடாது. அது வளர்ச்சி அல்ல. வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என தனது உரையின்போது தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் கூறியுள்ளார்.

எனினும், இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இதுபற்றி கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

ஏனெனில், 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், இந்த முறை பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் சிறந்த முறையில் குடியரசு தின விழா நடைபெற வேண்டும் என நான் குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால், அதற்கு அவர்கள் பதில் தரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் அவர்களிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் மட்டுமே நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்வாரா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். தெலுங்கானா வரலாற்றில் அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என எழுதப்படும் என அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com