குடியரசு தினம்: காஷ்மீரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனை

குடியரசு தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள சூழலில், காஷ்மீரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறது.
குடியரசு தினம்: காஷ்மீரில் குண்டுவெடித்த பகுதியில் பாதுகாப்பு படை தீவிர வாகன சோதனை
Published on

ரஜோரி,

காஷ்மீரின் ஜனவரி முதல் வாரத்தில் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்கிரி கிராமத்துக்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து 3 வீடுகளில் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடினர்.

இதில் அந்த வீடுகளில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில், உயிரிழந்த பிரீதம் லால் என்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அவரது வீட்டுக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் சான்வி சர்மா (வயது 7) விஹான் குமார் சர்மா (4) ஆகிய அக்கா, தம்பிகளான 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடந்த 14 மணி நேரத்துக்குள் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜோரி நகரில் முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்ட மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.

துப்பாக்கி சூடு நடத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பிய நிலையில், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் யாரும் பிடிபடவில்லை.

இந்த சூழலில், நாட்டில் குடியரசு தினம் நாளை மறுநாள் கோலாகலமுடன் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டனர்.

இதனையொட்டி, துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து தாக்குதல் நடந்த ரஜோரி பகுதியில், பாதுகாப்பு படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சந்தேகத்திற்குரிய வாகனங்களை தடுத்து, நிறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எதிர்பாராத தாக்குதல்கள் நடந்து விடாத வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஜனவரி 21-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரை இந்தோ-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் ஆபரேசன் அலெர்ட் என்ற பெயரிலான பாதுபாப்பு ரோந்து பணியானது மேற்கொள்ளப்படுகிறது. இதில், எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிப்பதற்காக இந்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பயிற்சி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நாட்டின் எல்லையையொட்டிய, கடல் பகுதியிலும் ரோந்து படகுகளில் வீரர்கள் சுற்றி வந்து, அதன் வழியே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com