குடியரசு தின டிராக்டர் பேரணி: உயிரிழந்த விவசாயி குடும்ப உறுப்பினர்களுக்கு பிரியங்கா காந்தி ஆறுதல்

குடியரசு தின டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி இன்று சந்தித்து பேசினார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி: உயிரிழந்த விவசாயி குடும்ப உறுப்பினர்களுக்கு பிரியங்கா காந்தி ஆறுதல்
Published on

ராம்பூர்,

டெல்லியில் விவசாயிகளின், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று 71வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சிலர் போலீசாரின் அனுமதியை மீறி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

போலீசார் அளித்த போராட்ட அனுமதிக்கான தடம் மற்றும் நேரம் ஆகியவற்றிற்கு பதிலாக விவசாயிகளில் சிலர் வேறு தடத்திலும், வேறு நேரத்திலும் டிராக்டர்களை கொண்டு தடுப்பான்களை முட்டி, மோதி உடைத்து முன்னேறி செங்கோட்டையை அடைந்தனர்.

இந்த சம்பவத்தில், வன்முறை கும்பலை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். அத்துமீறியவர்களை தடுக்க தடியடி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அதன்பின், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் செங்கோட்டையில் மத கொடி ஒன்று ஏற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள் கூட இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகளின் பேரணியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அது போலீசாரின் தாக்குதலால் நடந்தது என விவசாயிகள் கூறினர்.

ஆனால், அத்துமீறி டிராக்டர்களால் தடுப்பான்களை முட்டி, மோதி சென்றதில் டிராக்டர் கவிழ்ந்து அவர் பலியானார் என போலீசார் தரப்பு விளக்கம் அளித்தது.

டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று ராம்பூர் புறப்பட்டு சென்றார்.

அவர் ராம்பூர் செல்லும் வழியில் பாதுகாப்புக்காக உடன் சென்ற வாகனங்கள் ஹாப்பூர் சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தெளிவற்ற வானிலையால் பிரியங்கா காந்தி சென்ற காரின் ஓட்டுனருக்கு வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையோரம் கார் நிறுத்தப்பட்டது. காரின் ஓட்டுனர் கார் கண்ணாடியை துடைத்து சுத்தப்படுத்தினார். உடனே, காரில் இருந்து கீழே இறங்கிய பிரியங்கா ஓட்டுனரிடம் இருந்து துணியை வாங்கி தனது முன் பக்கம் இருந்த கண்ணாடியை துடைத்து விட்டார்.

இதன்பின் ராம்பூர் சென்ற பிரியங்கா காந்தி டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com