அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் இனி ஏற்கப்படாது - தேர்தல் கமிஷன்

அடுத்த ஆண்டு அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் தொடங்க இருக்கிறது.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு திருத்தத்தில் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பீகாரில் சுமார் 3 கோடி வாக்காளர்கள் தங்களது பிறந்த இடம் அல்லது தேதியை நிரூபிக்க தேவையான 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதனால் தகுதியுள்ள குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும், பா.ஜனதா அரசு தங்கள் நலனுக்காக அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோல் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பல அரசியல் கட்சிகளின் சார்பாக, வாக்காளர் திருத்த பட்டியல் தொடர்பாக விவாதம் நடத்த தேர்தல் கமிஷன் அவசர கூட்டத்துக்கு காங்கிரஸ் சட்ட ஆலோசகர் நேரம் கோரியிருந்தார். அவர் அனுப்பிய இ-மெயிலில் அனைத்து 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகள் மட்டுமே இதுவரை கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தின.
இதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் இருந்து மட்டுமே தகவல் தொடர்புகளை மேற்கொள்ளும். அங்கீகரிக்கப்படாத நபர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.






