விவசாய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி பலன்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டும்

விவசாய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி பலன்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
விவசாய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி பலன்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டும்
Published on

பெங்களூரு

உணவு உற்பத்தி

பெங்களூரு ஹெப்பாலில் விவசாய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு தேசிய மாநாடு மற்றும் பேக்கிங் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பசுமை புரட்சிக்கு பிறகு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. அதற்கு முன்பு உணவு தேவைக்கு பிற நாடுகளை சார்ந்து இருந்தோம். இந்த பசுமை புரட்சிக்கு சமீபத்தில் மரணம் அடைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் அதிக பங்களிப்பு வழங்கினார். உணவு உற்பத்தி இன்னும் அதிகரிக்க வேண்டும். உணவு தானியங்களின் தரத்தை மேம்படுத்த விவசாய பல்கலைக்கழகங்கள் அதிக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

உரிய ஆராய்ச்சிகள்

கர்நாடகத்தில் தரிசு நிலம் அதிகமாக உள்ளன. காலநிலை மாற்றத்தால் மாநிலத்தில் வெள்ளம், வறட்சி அடிக்கடி ஏற்படுகிறது. அதனால் தான் நமது விவசாயிகளுக்கு விவசாய நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது. இதற்காகவே விவசாய பல்கலைக்கழகங்கள் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆராய்ச்சியின் பலன்கள் விவசாயிகளுக்கு தீவிரமாக போய் சேர வேண்டும். குறைந்த நீரில் எத்தகைய பயிர் சாகுபடி செய்ய வேண்டும், காலநிலை மாற்றத்தால் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகளவில் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.

ஆராய்ச்சி கூடங்களில் இருந்து நிலத்திற்கு என்ன போய் சேர்ந்துள்ளது, அதே போல் நிலத்தில் இருந்து கிடைக்கும் அனுபவங்கள் ஆராய்ச்சி கூடங்களுக்கு வந்து சேர வேண்டும். இதை உறுதி செய்ய விவசாய பல்கலைக்கழகங்கள் உரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முழு ஆதரவு

புதிய விதைகள் விவசாயிகளுக்கு போய் சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் புதிய விதைகள் கண்டுபிடிப்பால் எந்த பயனும் இல்லை. விவசாய ஆராய்ச்சிகளுக்கு அரசு முழு ஆதரவு வழங்க தயாராக உள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com