

மும்பை,
ஈரான் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று முன்தினம் இது 96.71 ஆக இருந்தது.
இதன் மூலம் கடந்த மே மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வீழ்ச்சியான 96.96-க்கு அருகில் மீண்டும் வந்துள்ளது. இதைப்போல ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பும் கடந்த சில வாரங்களில் 50 பில்லியன் டாலருக்கு மேல் சரிந்து, கடந்த 2-ந்தேதி நிலவரப்படி 734 பில்லியன் டாலர் அளவுக்கே இருந்தது.
எனவே ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் முக்கியமாக, டாலரின் மிகப்பெரிய நுகர்வோரான அரசுக்கு சொந்தமான 3 எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு நடப்பு சந்தை நிலவரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறப்பு சாளரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வசதியின் கீழ், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலம் மேற் படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலர் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் பொது நிதிச்சந்தையில் இருந்து டாலர் வாங்குவது தடுக்கப்படும்.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கான இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வரும். முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய தொடர் மதிப்புச்சரிவை தடுப்பதற்காக, எண்ணெய் நிறுவனங்களின் தேவையை அன்னிய செலாவணி சந்தையிலிருந்து விலக்கி வைக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடங்கியது குறிப் பிடத்தக்கது. இதைப்போல 2 மில்லியன் டாலருக்கு மேல் வாங்கும் வங்கி கள், அதற்காக 20 சதவீத தொகுப்பை உருவாக்க வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.