காஷ்மீர் காங்கிரசில் பரபரப்பு: கூண்டோடு ராஜினாமா செய்த மூத்த நிர்வாகிகள்...!

காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக சோனியா, ராகுலுக்கு கடிதம் அனுப்பினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜம்மு,

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கட்சிகள் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரசில் பெரும் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மாநில முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.கள் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நேற்று தங்கள் பொறுப்புகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத்தின் நெருக்கமானவர்கள் என கருதப்படும் இவர்கள், மாநில கட்சி தலைவர் குலாம் அகமது மிர் தங்களை ஒதுக்குவதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி கடந்த மாதம் ஜம்மு வந்தபோதே இது குறித்து அவரிடம் கோரிக்கை வைத்ததாக கூறிய அவர்கள், தங்களது இந்த நடவடிக்கையால் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம், கட்சியினரிடையே பெருத்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com