கர்நாடக கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி வழக்கு

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுத்த கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கர்நாடக கவர்னரின் முடிவை எதிர்த்து ராம் ஜெத்மலானி வழக்கு
Published on

புதுடெல்லி,

கர்நாடக முதல்மந்திரியாக பதவி ஏற்க பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி இரவோடு இரவாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. அதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பாவின் பதவி ஏற்புக்கு தடைவிதிக்க முடியாது என அறிவித்தனர்.

இதையடுத்து, நேற்று எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன்னுடைய மனுவில் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தது, அரசியலமைப்பு சட்டம் அவருக்கு வழங்கி உள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருப்பதை காட்டுகிறது. அவர் தன்னுடைய பதவிக்கும், தான் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கர்நாடக கவர்னர் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தாக்கல் செய்த மனு 18ந் தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு வர உள்ளது. அதோடு சேர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யுங்கள் என அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com