

புதுடெல்லி,
விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களையும், எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இந்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி. மற்றும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோரும் விவசாயிகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்றும்(புதன்கிழமை) நடைபெற உள்ளது.