நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதம்: சபாநாயகரிடம் வழங்கிய கனிமொழி எம்.பி.

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான கடிதத்தை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஐகோர்ட்டு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.






