

புதுடெல்லி,
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. கட்சி விதிமுறையில் திருத்தமும் செய்யப்பட்டது.
இதை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி காமேஸ்வரராவ், இந்த வழக்கை 4 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பாலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் அ.தி.மு.க.வின் கட்சி விதிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து கேள்வி எழுப்ப அதிகாரம் இல்லை எனவும், கட்சி விதிகள் மாற்றம் செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதால் கே.சி.பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதாடினார்.
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என தெரிவித்தனர். இந்த மனுவுக்கு கே.சி.பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 13ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.