பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டம்

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வருகிற 17-ந் தேதி முடிவு எடுக்க உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான் இதற்கு காரணம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலை இருந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கக்கூடாது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் சுங்கவரி வசூலிக்க வேண்டும்.

உயர்த்தப்பட்ட வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு தொகையை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.வருகிற 17-ந் தேதி டெல்லியில் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com