

கொச்சி,
ஒகி புயல் பாதிப்பு மீட்பு பணி குறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்புக்கு பிறகு மிகப்பெரிய தேடுதல் வேட்டை ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக நடந்தது. கடற்படையுடன், கடலோர காவல் படையும் இணைந்து 4 வாரங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதற்காக 16 கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
சுமார் 4 லட்சம் சதுர மைல் பரப்பளவில் கடலில் மீனவர்களை தேடும் பணி நடந்தது. கடலில் தத்தளித்த தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு பகுதிகளை சேர்ந்த 136 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மாலத்தீவு நாட்டின் உதவியுடனும் மீட்பு பணி நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.