

புதுடெல்லி,
பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
வளைகுடா போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. அதேநேரம் அவற்றின் விற்பனையிலும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக சில்லறை விற்பனை நிலையங்கள் வாகனங்களின் டேங்கில் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும். அதுவும் நாளொன்றுக்கு ஒரு வாடிக்கையாளருக்கு 200 லிட்டருக்கு மேல் நிரப்பக்கூடாது என கட்டுப்பாடு விதித்தது. இதைப்போல தொழில், வர்த்தகம் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசல் வாங்கவும் தடை விதித்தது.
விலை அதிகரிப்பு காரணமாக மொத்தப் பயனாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து அதிகமாக வாங்கத் தொடங்கியதால், சில பகுதிகளில் டீசலுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்தது. உள்ளூர் மட்டத்தில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்காக கடந்த 12-ந்தேதி விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிந்து, ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராக தொடங்கி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் வினியோகமும் சீரடைந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை இன்று (புதன்கிழமை) முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருந்ததாவது:
அதன்படி நாட்டில் நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் வினியோக நிலவரம் குறித்து ஆய்வு செய்த பின்னர், கடந்த 12-ந்தேதியிட்ட உத்தரவு இனியும் செயல்படுத்த தேவையில்லை என அமைச்சகம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் (சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமான வினியோகத்தை தற்காலிகமாக ஒழுங்குபடுத்துதல்) ஆணை, 2026-ன் பிரிவு 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு ஜூன் 12-ந்தேதி வெளியிட்ட தனது ஆணையை திரும்பப்பெறுகிறது. இது ஜூலை 1-ந்தேதி முதல் (அதாவது இன்று) அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறியிருந்தது.
அதன்படி பெட்ரோல்-டீசல் விற்பனை தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று முதல் நீக்கப்படுகிறது.