

புதுடெல்லி,
தொடர் பண்டிகைகள் மற்றும் திருமண காலம் காரணமாக வரும் மாதங்களில் சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.
வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் இந்தியாவில் விலைவாசி உயர்வு நீடிக்கிறது. இதனால் சில்லறை பணவீக்கம் கடந்த அக்டோபரில் 6.09 சதவீதமாக அதிகரித்தது. அந்தவ கையில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிசர்வ வங்கியின் பணவீக்க உச்சபட்ச இலக்கை இது கடந்திருந்தது.
இந்த நிலையில் வருகிற மாதங்களில் சில்லறை பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நவம்பர் மாத பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம், ஹார்முஸ் நீரிணை சிக்கல், சர்வதேச பொருளாதார கொள்கை நிலையற்ற தன்மை போன்றவை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் வலுவான பேரியல் பொருளாதார அடிப்படைகள் மற்றும் போதுமான தொகுப்பு இருப்பு ஆகியவை இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்கின்றன.
மத்திய கிழக்கு பதற்றமும், ஹார்முஸ் சிக்கலும் எண்ணெய் விலை மற்றும் கடல்வழி சரக்கு போக்குவரத்து செலவுகளை நிலையற்ற தன்மையில் வைத்திருக்கின்றன. இந்த வினியோக அதிர்ச்சிகள், வருகிற மாதங்களில் மொத்த மற்றும் சில்லறை விலை குறியீடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.
எனினும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவும், ரூபாய் மதிப்பு உயர்வும் இறக்குமதி அழுத்தத்துக்கு சற்றே நிவாரணம் அளிக்கக்கூடும்.
நவம்பர் வரையும் நீடிக்கும் பண்டிகை காலமும், திருமண காலத்தின் தொடக்கமும் நாடு முழுவதும் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் தேவையை அதிகரித்து இருக்கின்றன. இதனால் வருகிற மாதங்களில் சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அடிப்படை விளைவின் தொடர்ச்சி மற்றும் வலுவான எல்-நினோ சாத்தியக்கூறு உள்ளிட்ட வானிலை தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, பணவீக்கம் குறுகிய காலத்தில் உயர்வுக்கான அழுத்தங்களையும் எதிர்கொள்ளக்கூடும்.
உள்நாட்டுப் பொருளாதாரச் செயல்பாடு டிசம்பர் காலாண்டிலும் அதன் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதோடு, சரக்குப் போக்குவரத்து, வரி வசூல், சரக்கு மற்றும் எரிபொருள் நுகர்வு போன்றவை தொடர்ச்சியான விரிவாக்கத்தை அதிர்வெண் குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறு நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.