நடப்பு ஆண்டில் 68 ராஜ்யசபை எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய 3 பேரின் பதவி காலம் வருகிற 27-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
நடப்பு ஆண்டில் 68 ராஜ்யசபை எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபையின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எம்.பி.க்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில், 9 மத்திய மந்திரிகள் உள்பட மொத்தம் 68 ராஜ்யசபை உறுப்பினர்கள் ஓய்வு பெற இருக்கின்றனர். இதனால், பல்வேறு அரசியல் தலைவர்களும் அந்த பதவியை பெறும் முனைப்பில் உள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய 3 பேரின் பதவி காலம் வருகிற 27-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதேபோன்று, சிக்கிமில் எஸ்.டி.எப். கட்சியின் உறுப்பினர் ஹிஷே லச்சங்பா என்பவரின் பதவி காலம் வருகிற பிப்ரவரி 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஓரிடத்துக்கான தேர்தலும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

மொத்தமுள்ள 68 இடங்களில், அதிக அளவாக உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள் காலியாக உள்ளன. இதனை தொடர்ந்து மராட்டியம் மற்றும் பீகார் (தலா 6), மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் (தலா 5), கர்நாடகா மற்றும் குஜராத் (தலா 4), ஒடிசா, தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் (தலா 3), ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் (தலா 2), உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், அரியானா மற்றும் சத்தீஷ்கார் (தலா 1) ஆகியவை உள்ளன.

இதில், வரும் ஏப்ரலுடன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் துறை மந்திரி புபேந்திரா யாதவ், சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.

இதேபோன்று, வெளிவிவகார இணை மந்திரி வி. முரளீதரன், மைக்ரோ, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மந்திரி நாராயண் ரானே, முன்னாள் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் ஓய்வு பெறுவோரின் வரிசையில் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com