மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: அமித்ஷா ஆய்வு
x

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.அதோடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது

இந்த சூழலில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். இதற்கான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை முன்னிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். குறிப்பாக உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:

16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story